
அமிழ்தினும் இனிய என் தாய்மொழி , தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியாகும் .இயற்றமிழ் , இசைத் தமிழ், நாடகத்தமிழ் என முப்பரிமாண இயல்பு கொண்ட தமிழ் மொழியில் சொல்லப் படாத செய்திகளே இல்லை. நான் புவிஇயல் துறை பேராசிரியராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவள். சுருங்கச் சொன்னால் புவிஇயல் என் தொழில். தமி ழ் என் சுவாசம் .. ஓய்வு மணி நேரங்களில் கல்லூரி நூலகத்திற்கு சென்று பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்களுடன் ஒன்றி விடுவேன் ..
நவில்தொறும் நவில்தொறும் நூல் நயம் போல பயில் தோறும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்பது எத்துனை பொருள் நிறைந்தது !! நாம் படித்ததையே மீண்டும் மீண்டும் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்திகள் தெரியும்.அவ்வாறு நான் படித்து மகிழ்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .. இதோ ஒரு ஆரோக்கிய அறிவுரை ..
ஓரடி நடவேல்
ஈரடி நில்லேல்
இருந்துண்னேல்
கிடந்துறங்கேல்
1. உங்கள் நிழல் உங்கள் காலடியில் ஒரு அடியாக விழும் நேரத்தில் {12...2}வெயிலில் வெளியே நடமாடக்கூடாது .
2. ஈரமான இடத்தில் நீண்ட நேரம் நிற்க கூடாது .
3. உண்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே உண்ணக் கூடாது .
4. தூக்கம் வராத போது படுக்கையில் உறங்குவது போல கிடக்கக் கூடாது ..
இப்போதெல்லாம் நாம் நிறைய கலோரிகள் பற்றி பேசுகிறோம் .நிறைய அட்டவணைகள் ,உணவு ஆலோசகரின் அறிவுரை ,பத்தியம் ,பட்டினி பாட்டி வைத்தியம் என அங்கே இங்கே என அல்லாடுகிறோம் .நம் வள்ளுவர் இரண்டே வரிகளில் ஒரு எளிதான அறிவுரை தருகிறார் .
" மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் ."
{யாக்கை ..உடல் .அருந்தியது ....உண்டது . அற்றது ....செலவு செய்த கலோரிகள் }
நல்ல உடல் உழைப்பு ,நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் தரும். அன்றாடம் அவரவர் வேலைகளை அவரவர்களே செய்து கொள்வது ,முடிந்தவரை வாகனங்களை தவிர்த்து நடந்து செல்வது , குழந்தைகளுக்கும் உடல் உழைப்பை பழக்குவது என இயந்திரங்களின் உதவிகளை குறைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் நாம் 100 ஆண்டு காலம் நலமாக வாழலாமே !!!.
இதைத்தான் திருமூலர் , '' உடலை வளர்க்கும் உபாயம் அறிந்து உடலை வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே ''..என கூறுகிறார் .
நாம் ஒவ்வொருவரும் நமது உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றோம். அதற்க்கான பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள் .தியானம் ,மூச்சுப் பயிற்சி ,யோகா ,உடற்பயிற்சி ,உணவுப் பழக்கம் ,வாழ்க்கைமுறை ,போன்றவற்றை தனித்தனியாக விவரித்து எழுதிக் கொடுத்துள்ளனர் .நாமும் அவற்றை கேட்டும் ,பார்த்தும் ,படித்தும் அறிந்து வைத்திருக்கின்றோம் .ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இவற்றினை நாம் தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை. நடைபயிற்சி செய்வதுகூட நமக்கு முடிவதில்லை .இதற்க்கான உண்மையான காரணம் சோம்பலும் மனமின்மையுமே ஆகும் .இப்படிப் பட்டவர்களுக்கு வள்ளுவர் ஒரு குறளைக் கூறுகின்றார் . அதாவது " அளவறிந்து வாழ்தல் ".
" அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் "
வள்ளுவர் பெருமான் இங்கே கூறும் "அளவறிந்து "என்ற பதத்தை நாம் நம் வாழ்க்கை பயணம் முழுவதும் எல்லாவற்றிற்கும் அடித்தளமாக அமைத்துக் கொண்டால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக ,மகிழ்வானதாக ,பிறர் போற்றும் வண்ணம் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை .எடுத்துக்காட்டாக குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாக இருப்பது நலம் ." அளவான குடும்பம் வளமான வாழ்க்கை ".குடும்பக் கட்டுப்பாடு வறுமையின் கொடுமையிலிருந்து விடு பட உதவும்.
இனி அடுத்தாக செல்வத்தை எடுத்துக் கொள்வோம் ".பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை '' என்றும் ,பணம் இல்லாதவன் பிணம் " என்றும் கூறப்படுவது மிகச்சரியானது என்றாலும் பணத்தை மிக மிக அதிகமாக குவித்து முடக்கி வைப்பதால் துன்பமே விளையும் என்பதில் மாற்றில்லை .நேர்மையான வழியில் பொருள் ஈட்டினால் பதுக்கி வைக்கும் அளவிற்குஒருபோதும் செல்வம் குவியாதுஎன்பதுதான்உண்மை.குறுக்கு . வழியில் பணம் பண்ண ஓடிக்கொண்டிருப்பதுகூட ஒருவிதமான மன நோய்
என்பதுதான் சரி .நமது சராசரி தேவைகளை இயற்கை அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளது .படுத்து உறங்க ஆறு அடி இடம் போதும் .உணவும் ஒரு வேளையில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் உட்க்கொள்ள இயலும். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் " அன்றோ !!!
இக்கருத்தை அவ்வையார் மிக அருமையாக கூறியுள்ளார்.
"ஒரு வேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருவேளை உணவை ஏலென்றால் ஏலாய்
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது ."
அளவுக்கு அதிகமாக உண்பது ஆரோக்கியக் கேடு. அளவுக்கு அதிகமாக பொருள் சேர்ப்பது அதைவிடக் கேடானது .
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி கூட ஆபத்தானதே. அளவுக்கு அதிகமாக உணர்சிகளை வெளிப்படுத்துதல் { சிரிப்பு , அழுகை, சினம் ,காமம் இன்னபிற }நோய்வாய்படுத்தும். இதை உணராமல் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை முதலில் பிரபலமாக இருப்பதுபோல் தோன்றும். பின்னர் மெல்ல மெல்ல மறைந்து இல்லாமல் போகும். இறுதியாக அத் தொய்விலிருந்து மீள இயலாது மீண்டும் தோன்றாமல் அழிந்தே போகும். அளவோடு எதையும் செய்து வளமாக " வாழும் கலை " அறிந்து வாழப் பழகிக் கொள்வோமாக !!!
இன்னொரு பழம் பாடலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
" அரும்பு கோணிடில் நறுமணம் குறையாது
கரும்பு கோணிடில் அருஞ்சுவை மாறாது
இரும்பு கோணிடில் அங்குசமாகலாம் நரம்பு
கோணிடில் நானென் செய்குவன் ."
கோணல் அரும்பு மணம் தரும். கோணல் கரும்பு சுவை தரும். கோணல் இரும்பு அங்குசமாகும். ஆனால் நம் நரம்புகள் வளைந்து கோணலானால் நாம் கீழே வீழ்ந்து விடுவோம். நரம்புகள் எப்போது கோணலாகும்??நாம் செம்மையாக வாழாதபோது .!!!கோணல் வாழ்க்கை நம்மோடு போகாது. நம் சந்ததிகளுக்கும் வழி வழியாய் போய்சேரும் ." செல்வத்தை இழந்தால் நாம் ஒன்றையும் இழக்கவில்லை .ஆனால் ஆரோக்கியத்தை இழந்தால் அனைத்தையும் இழந்தவராவோம். " நம் செல்லக் குழந்தைகளுக்கு நாம் நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும்.
நல்ல பழக்க வழக்கங்களையும் கூட நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நல்ல எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும். நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைப்பதை போல பண்பட்ட மனதுடைய மனிதர்கள் மூலம் நல்லதே நடக்கும். " மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் " என வள்ளுவர் பெருமான் கூறி உள்ளார். மன மாசுக்கள் யாவை? "அழுக்காறு {பொறாமை },அவா {பேராசை } ,வெகுளி {கடும் சினம் },இன்னாச்சொல் {அடுத்தவரை புண் படுத்தும் அல்லது கொடுமையான சொற்கள் } இவை நான்கும் மனதை மாசு படுத்தும் என்பதால் இவற்றை மனதிலிருந்து அறவே நீக்குதலே அறமாகும்.
வாய்மை எனப்படுவது எந்த சூழ்நிலையிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறாமல் இருப்பதாகும். தண்ணீர் நமதுஉடலை தூய்மை செய்வது போல வாய்மை மனதை தூய்மையாக்கும் . "புறத்தூய்மை நீரால் அமையும்.அகத்தூய்மை வாய்மையால் காணப்படும். " என வள்ளுவம் கூறுகிறது.
மனமே மனிதனை ஆள்கிறது . மனித மனம் ஆசைகளால் கட்டமைக்கப்பட்டது.நாம் நம் ஆசைகளை வரையறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.வகைப் படுத்தவும் வேண்டும். நியாயமான ஆசைகளை மிகவும் நேர்மையான வழியில் நிறைவேற்றிக் கொள்ள பயிற்சி பெற வேண்டும். இம் மனப் பயிற்சி நல்ல நூல்களை படிப்பதால் கிடைக்கும். நல்ல மனிதர்களோடு பழகுவதால் கிடைக்கும்.
" நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே
அன்னார் குணங்கள் உரைப்பதும் நன்றே
அன்னாரோ டிணங்கி இருப்பதும் நன்றே !!! "
தீயவற்றை கண்டால் என்ன செய்ய வேண்டும்....எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் விலகி ஓடி விட வேண்டும்.
"தீயாரைக் காண்பதும் தீதே தீமிக்க
தீயார் சொல் கேட்பதும் தீதே
தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே
தீயாரோ டிணங்கி இருப்பதும் தீதே !!!"
நாம் யாரோடு பழகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். பொதுவாக " உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறோம் '' என்பார்கள். தீய மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் ஒரு போதும் அனுமதிக்கலாகாது. தீய செயல்களுக்கு ஒரு போதும் துணை போகக்கூடாது.''தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் ''அல்லவா!! தீயவற்றை சந்திக்க நேர்ந்ததால் என்ன செய்ய வேண்டும்.ஒரு பழம் பாடல் அறிவுரைக்கின்றது.
'' கொம்புளதர்க் கைந்து குதிரைக்கு நான்கு முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே வம்புசெறி
தீங்கினர் தம் கண்ணில் படாத தூரத்தே
நீங்குவதே நல்ல நெறி !!! ''
கொம்புள்ள மிருகங்களுக்கு ஐந்து அடி தூரம் தள்ளி நின்றால் போதும்.
குதிரைக்கு நான்கு முழமும் ,வலிமையான யானைக்கு ஆயிரம் அடி தூரமும் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் வம்புகள் நிறைந்த மனிதர்களின் பார்வையில் படாத தூரத்திர்க்கே நாம் ஒதுங்கிச் சென்று விடுதலே நமக்கு நல்லது. அதனால்தான் வள்ளுவர் ,
''தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் . '' என வலியுறுத்திக் கூறுகின்றார் .தீய குணங்களிலேயே மிகவும் பாதிப்பை எற்படுத்தக் கூடியது அழுக்காறு எனப்படும் பொறாமை குணமாகும். பொறுத்துக் கொள்ள இயலாமை என்பதே பொறாமை என்றாகியது. பிறர் நன்கு வாழ்வதை பொறுக்க இயலாதவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி , அவர்கள் அழிந்து போகும் அளவிற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களைப் பற்றி வீணில் பொய்ப்பழி கூறுதல்,அவதூறு செய்தல் ,அவமானப் படுத்துதல்,முகத்திற்குப் பின்னே புறம் பேசுதல் ,மனம் நோகும்படி இடித்துரைத்தல் ,ஜாடைபேசுதல் ,குத்திக் காட்டுதல் போன்ற இழி செயல்களில் ஈடுபடுவர்கள்.. பொறாமை குணம் படைத்தவர்களை நாம் பார்க்க நேர்வதும், உடன் பணியாற்ற நேர்வதும் சில சமயங்களில் பழக நேர்வதும் ,அதிக பட்சமாக உடன் வாழ நேர்வதும் நடைமுறை வாழ்வில் நடக்கக் கூடிய ஒன்றே.அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் ...கூடியவரையில் அமைதியாக ஒதுங்கிச் சென்று விட வேண்டும்.ஒதுக்குவது தெரியாமல் அவர்களை ஒதுக்கிவிட வேண்டும்.{ignore }இல்லாவிட்டால் நமக்குத் தெரியாமலேயே பல விதத்தில் தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்கள் .அதனால்தான் " அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை " ...என ஐய்யன் திருவள்ளுவர் என அறிவுரை கூறியுள்ளார்.ஒதுங்கிச் செல்வதால் நாம் கோழையாகி விட்டோம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. நாம் அமைதியாகச் சென்றுவிட்டால் அவர்கள் கொஞ்ச நாட்களில் சலித்துப் போய் தானாகவே ஓய்ந்துபோய் விடுவார்கள்.
அவதூறு பேசுதல் என்பதை இலக்கியங்கள் அம்பல் தூற்றுதல்,மன்றோரம் பேசுதல் என்றும் கூறுகின்றன.அம்பாள் தூற்றுதல் காட்சி நற்றிணை பாடல்ஒன்றில் அழகாகவர்ணனை செய்யப்படுகின்றது.அதாவது தலைவன் மீது தலைவி காதல் கொண்டுள்ளதை ஊரார் அறிகின்றனர்.அதனைப் பற்றி கிசு கிசுவென பேசிக் கொள்கின்றனர்.
" சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற ..."
அதாவது பெண்கள் ஒருவரையொருவர் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு , தமது மூக்கின்மேல் சுட்டுவிரலை வைத்துக் கொண்டு வாய் அசைவது தெரியாமல் அம்பல் தூற்றுகின்றனர்.
இவ்வாறு அழுக்காறு காரணமாக அவதூறு செய்பவர்களையும் ஆன்றோர்கள் அச்சுறுத்தி பாடியுள்ளனர்.
" வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி சென்றிருந்து
வாழ்வாளே சேடன் குடி புகுமே
மன்றோரம் சொன்னார் மனை. " என ஒரு பழம் பாடல் அச்சுறுத்துகின்றது.
" அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று தீயுழி உய்த்து விடும் " ...என வள்ளுவரும் கூறிச் சென்றுள்ளார். நல்லவராய் வாழ்தலே நல் வழிப் படுத்தும் நல்லறமாகும்.
அவா என்கிற ஆசை மனிதனை பாழாக்கும் அடுத்த உணர்ச்சியாகும்.மனித மனம் ஆசையின் பாற் பட்டதாகும். முதலில் தான் மிக அழகாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை. இது ஏற்புடையதே. இந்த ஆசை பேராசை ஆகும் போது என்ன நடக்கிறது ...நமது தோற்றம் நமது மரபணு சார்ந்த விஷயமல்லவா!.இதை மறந்து விட்டு நாம் என்ன செய்கிறோம் ...அழகு நிலையங்களை நாடிச் சென்று அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு ஏராளமான பணத்தையும் பொன்போன்ற நேரத்தையும் வீணாக்குகின்றோம் .தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரப் படுத்தப்படும் அத்தனைஅழகு சாதன பொருட்களையும் வாங்கி வருடக்கணக்கில் உடல் முழுவதும் பூசிக் கொண்டு வசீகரக் கனவு கண்டுகொண்டு வாழ்நாட்களை வீணாக்குவதுடன் காலப் போக்கில் நமது இயற்க்கை சருமத்தையும் பாழ் படுத்திக் கொள்கின்றோம்.உண்மையில் நல்ல மனமும் குணமுமே மனிதனை அழகாகக் நல்லமருந்தாகும் . " அகத்தின் அழகு தான் முகத்தில் தெரியும் " என்பது மூத்தோர் வாக்கல்லவா !!
வசதியான வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை. இது நியாயமானதே. இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ....நன்கு உழைத்து நேர்மையான முறையில் பொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய பொருளை சிக்கனமாக செலவு செய்து நிறைய சேமிக்க வேண்டும் ." சிக்கனமே சிறந்த வருமானம் " என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியிருப்பதை நாம் ஒரு போதும் மறக்கலாகாது. இங்கு ஆசை பேராசை ஆகும் போது என்ன நடக்கின்றது .....மனிதன் குறுக்கு வழிகளில் பணம்குவிக்க ஆரம்பிக்கின்றான் .லஞ்சம் ,கள்ளக் கடத்தல் ,கள்ளநோட்டு அச்சடித்தல் ,கள்ளச் சாராயம் காய்ச்சுதல் , பணமோசடி,போலியான நிதி நிறுவனம் நடத்துதல் ,சீட்டுக் கம்பெனி , வேலை வாங்கித்தரும் நிறுவனம்,போலியான மருந்து தயாரிப்பு போன்ற இன்ன பிற பொய்யான காரியங்களில் ஈடு பட்டு பாவப் பணத்தை ஏராளமாக சம்பாதித்து சரியாக வரியும் கட்டாமல் கறுப்புப் பணத்தையும் குவித்து வைக்கின்றான்.இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் படுவதோடு சாதரணர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப் படுகின்றது .இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " என்றுபட்டுக்கோட்டையார் பாடிஇருப்பதைப்போல நாம் வாழும் சமூகத்தின் மீது பொது மக்களாகிய நமக்கும் அக்கறை வேண்டும்.நாம் ஒவ்வொருவரும் நல்லவர்களாய் வாழ்வது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.இன்றேல் அரசாங்கம் எத்தனை கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சமூக சீர்கேடுகள் ஒழியமாட்டா .!
நம் முன்னோர்கள் ஆசைகளை '' மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை '' என கூறியுள்ளார்கள். இந்த மண்ணாசை இருக்கின்றதே அது ஆதி முதல் இன்று வரை மனிதனிடம் காணப்படும் ஒரு மிகப் பெரிய மனநோய் ஆகும்.இன்னும் சொல்லப் போனால் மண்ணாசை மனிதனின் அந்தம் வரை காணப்படும் போலும்..!அரசன் முதல் ஆண்டிவரை இந்த மண்ணாசை அனைவரையும் ஆட்க்கொண்டுள்ளது. அரசர்கள் அல்லது நாட்டை ஆள்பவர்கள் அடுத்தவர்களின் எல்லைக்குள் ஊடுருவுவதும் அவர்கள் நாட்டை அபகரிக்க முயற்ச்சிப்பதும் இன்றுவரை காணப் படுகின்றது.இது நாளைய நாட்க்களிலும் நடக்கக் கூடும் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய,கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.நாட்டின் பெருளாதாரத்தில் மிகப் பெரும் பகுதி இராணுவ தளவாடங்கள் சேகரிப்பதற்கென செலவிட வேண்டிய கட்டாயம் இன்று அனைத்து நாடுகளிலும் காணப் படுகின்றது.இதை நாட்டின் முன்னேற்றத்திக்கு செலவிட முடிந்தால் ...ஆஹா..நாட்டு மக்கள் எத்தனை வளமாக வாழ முடியும்!!
போர் உள்நாட்டு போராய் இருந்தாலும் சரி அயல் நாட்டினருடனான போராய் இருந்தாலும் சரி எத்தனை இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.நிலம்,நீர் ,காற்று ஆகியன மாசடைந்து நாட்டின் சுற்றுச் சூழலை அதிகமாக பாதிக்கின்றது போரில் பயன்படுத்துமாயுதங்கள் !போரில் இராசாயன ஆயுதங்களை நாடுகள் போரிட பயன்படுத்த தொடங்கி இருக்கும் சமீபகால போக்கு மிகவும் வேதனை தருவதாக உள்ளது.இராணுவ தளவாடங்கள் மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட இராணுவத்தினர் மக்களுக்கு ஏற்ப்படுத்தும் பாதிப்புகள் மிகக் கொடுமையானது. அப்பாவி பொது மக்களே இதில் அதிகம் துன்புறுகின்றனர் .ஆண்களைப் பிடித்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்வது ,பெண்களை வயது பாகுபாடின்றி நிர்வாணமாக்கி கொடூரமாக கூட்டு கற்பழிப்பு நடத்தி ,அவர்களை மோசமாக சிதைத்து கொலைசெய்வது,பொதுமக்களின் வீடுகளை சூரையாடுவது ,என பல சொல்லொணா துயரங்கள் தற்போது பரவலாக எங்கும் காணப் படுவது மனதைப் பி ழிகின்றது.
இதை கட்டுப் படுத்துவதற்கு பொதுக் கூட்டங்களும், பட்டினிப் போராட்டங்களும் ,பேரணிகளும் ,தலைவர்களின் பேச்சு வார்த்தைகளும், குழுக் கூட்டங்களும், மாநாடுகளும்,உலகெங்கிலும் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. இருந்தும் என்ன பயன்! நீதி கிடைத்ததா? நியாயம் பிறந்ததா? சமாதானம் ஏற்பட்டதா?சமநீதி வந்ததா?..........
'' பேசிப் பயன் என்னடி! கிளியே ,பேதையர் உலகமடி '' யென பாரதி எப்போதோ பாடிச் சென்று விட்டான்!!
'' ஆசையே துன்பத்திற்கு காரணம் !! ஆசை களை ஒழித்துவிடுங்கள் !!'' என புத்தர் பெருமானும் கூறிச் சென்றுள்ளார்.
''அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அதுஉண்டேல்
தவா அது மேன்மேல் வரும் '' என்றும் ,
''இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் ..'' என்று வள்ளுவர் கூறிச் சென்றுள்ளதை மனதில் ஆழப் பதித்து வைத்து வளமாக வாழ்வோமாக!!
அழுக்காறு, அவாவை அடுத்து மாந்தர்க்கு கேடு விளைவிக்கும் மனித உணர்ச்சி ''வெகுளி'' யாகும்.வெகுளி என்பது மிகுதியான கோபம் ஆகும். பொதுவாகமனிதற்குகோபம்எப்போதுவரும்? விரும்பத் தகாத,லாபம் தராத நன்மை பயக்காத ,எதிர்பார்ப்புகள் நிராசையாகும் போது கோபம் வருகின்றது.கோபத்தின் தீவிரம் தனி மனிதரின் சுபாவத்தை பொறுத்து அமைகின்றது. கோபம் எனப்படுகின்ற சினம் என்கிற வெகுளி எந்தசூழ்நிலை யில் ஏற்பட்டாலும் அதை தவிர்க்கவே வேண்டும். கோபத்தினால் ஒருபோதும் ஒரு நன்மையும் ஏற்படாது. மாறாக மிகுந்த தீமையே விளையும் .முதலாவதாக கோபப் படுவோரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும்.
ரத்த அழுத்தம் அதிகமாகும்.இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கும்.முகம் விகாரமாக மாறும்.உடல் ஆடும். மனம் தடுமாறி தன் கட்டுப் பாட்டை இழக்கும் .இதன் விளைவாக கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு போன்ற பாவச் செயல்கள் அரங்கேறும் .ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபம் தலைக் கேரிய நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவர் ,பகையாளி வீட்டு இளம் பெண்ணை கற்பழித்து விட்டார். இதில் மற்றொரு கொடுமை அந்த மனிதர் ஏய்ட்ஸ் நோயாளி ஆவார். பகையாளி வீட்டினரை பழிவாங்கவே தான் இப்படி நடந்து கொண்டதாக நீதி மன்றத்திலேயே கூறிய இவர் செயலின் அடித்தளம் அவரை ஆட்டிப் படைத்த ,கோபத்தினால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியே ஆகும்.
சினம் உடல் நலத்தைக் கெடுக்கும். சிரிப்பைத் தொலைக்கும்.நண்பர்களை பிரிக்கும்.உறவுகளை சிதைக்கும்.இறுதியாக உங்களைத் தனிமைப்படுத்தும்.!
''நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற '' ....குறள் .
'' சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமெனும்
ஏமப் புணையய் ''சுடும் .....குறள்
'' தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் ''....குறள்
எனவே அழுக்காறு, அவா , வெகுளி ,இன்னாச்சொல் என்ற நான்கு மாசுக்களையும் அறவே நீக்கி மனதை எந்த சந்தர்ப்பத்திலும் மலர் போல் மென்மையாகவும்,இறகு போல் இலகுவாகவும் வைத்துக் கொண்டு நாமும் மகிழ்ந்து நமது சக மனிதர்களையும் மகிழ்ச்சியாக வாழ விடுவோமாக!!!
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.நான் மிகவும் ரசித்த ஒரு நிதர்சனத்தைக் காட்டும் பழம் பெரும் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"இன்புறு நாளும் சிலவேயதா அன்றி
துன்பறு நாளும் சிலவே ஆதலால்
பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காற்று
இடிகரை ஒத்தது இளமை இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் அன்னன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும் அவ்வின்னும்
நாளை நாளை என்பீராகில் நாளை
நாளை நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர் !!!
கபிலரின் இந்த பாடல் எத்துனை பொருள் நிறைந்தது.எதுவும் நிரந்தரமல்ல என்பதை எடுத்துரைக்கும் அற்புதமான அறிவுரை பாடலாகும் .இன்பமும் நிலையானதல்ல .துன்பமும் சாசுவதமானதல்ல.மனித வாழ்வில் இன்பம் சில நாட்கள் மட்டுமே .துன்பமும் சில நாட்களே! நாம் இன்பம் என நினைப்பது துன்பமாவதும் உண்டு ! துன்பமான நிகழ்வுகள் பல இன்பமாக மாறுவதும் உண்டு !ஆகவே இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக கருதி நிதானத்துடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
செல்வமும் நிலையில்லா தன்மையுடையதே !பெருக்கெடுத்து ஓடும் ஆறு போன்றது .ஓரிடத்தில் ஒருபோதும் தேங்கி நிற்காது !அதன் மீது அதிக பற்று கொள்ள தேவை இல்லை.அந்த ஆற்றின் இரு கரைகள் போன்றது இளமை.நீர் பெருக்கு அதிகமானால் கரை உடைய நேரிடும் .ஆற்றின் நீர் குறைந்து போனால் கரை சரிந்து போகும்!முதுமை தவிர்க்க இயலாது .அதனால்தான் புத்தர் சாக்கடுக்கு முன் மூப்பை சுட்டியுள்ளார் .கரைமேல் உள்ள மரம் போன்றது வாழ்நாள். சரி இதெல்லாம் அனைவரும் அறிந்தது தானே என்று நாம் கூற முற்படும் முன் கபிலர் நமக்கு வழி வழிகாட்டுகிறார் .
" மக்களே! நிலை யற்ற வாழ்வில் நிலைத்து நிற்கக்கூடிய ஏதேனும் ஒன்றை செய்வீராக!அந்த ஒன்றும் நன்றே செய்வீராக!அந்த நன்றையும் இன்றே இப்போதே செய்வீராக! "சிந்திப்போமாக!
வாழ்வு நிலையானது இல்லை எனபது நிலைத்த உண்மை என்றாலும் வாழும் வரை நாம் முடிந்தவரை நம் வாழ்வை சிறப்பானதாக வாழ்ந்து முடிக்க வேண்டுமல்லவா! " உன் வாழ்நாட்களை எட்டு பகுதிகளாக பிரித்துக் கொள் .அந்தந்த வயதுக்கு ஏற்ப நீ செய்ய வேண்டியதை நிறைவாக செய் .உன் வாழ்வு இனிமையானதாக அமையும் " என ஒரு பழம் பாடல் வழி காட்டுகின்றது.
" ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பயிலாத கல்வியும்
மூவெட்டில் நடவாத மணமும்
நாலெட்டில் பிறவாத பிள்ளையும்
ஐ எட்டில் கட்டாத வீடும்
ஆரெட்டில் சுற்றாத ஊரும்
ஏ ழெட்டில் வாராத ஓய்வும்
எட்டெட்டில் வாராத மரணமும்
பயனிலதானே !
இப்பாடலில் வரும் வரிகள் எளிதாக புரிந்து கொள்ளுமாறு தெள்ளத்தெளிவாக அமைந்துள்ளன .இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்பட பாடல் எழுதப்பட்டுள்ளது. அப்பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது எனது தோழி ஒரு வினாவை முன் வைத்தார். சென்ற நூற்றாண்டில் மனிதனின் சராசரி வாழ்நாள் 45 வயதாக இருந்தது. மருத்துவத்தில் ஏற்ப்பட்ட அபார வளர்ச்சி , சுகாதார முன்னேற்றம் ,தனிமனித விழிப்புணர்வு ,ஆக்கபூர்வமான அரசு நடவடிக்கைகள் ,சமூக ஆர்வலர்களின் இன்ன பிற செயல்களின் மூலம் மனிதனின் வாழ்நாள் மிக மிக உயர்ந்து காணப்படும் இந்நாளில் 64 வயதில் வாராத மரணம் பயனற்றது என கூறுவது பொருத்தமானதுதானா என வினவினார் .
மரணம் என்பதற்கு நேரடி பொருள் கொள்ளாமல் கொஞ்சம் உள்ளே போய் சமாதி நிலை என்று பொருள் கொள்வோமா! 64 வயதிற்குப் பிறகு " நான் ,எனது " என்பதிலிருந்து விடுபட்டு நாம் பொது மனிதராகி ,வேண்டுதல் வேண்டாமை என்ற நிலை க்கு வந்து விட வேண்டும் .
" அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும் பசி எவர்க்கும் ஆற்றிய " அருட்ப்பெரும் ஜோதியான கருணைமிகு நம்வள்ளலார் பெருமகனார் " செத் தாரைப் போல் திரி " என கூறி சென்றதை இங்கே நாம் நினைவு கூர்தல் நன்று.